கலைஞர்களுக்கு கவுரவம்
2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெறும் 90 கலைஞர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.இயல், இசை, நாடகம் என்ற அடிப்படையில், நாடகம், திரைப்படம், சின்னத்திரை உட்பட பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கலைமாமணி, இதைத்தவிர இம்மூன்று துறைகளில் சாதனையாளர்களாக திகழ்ந்த மகாகவி பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோரின் பெயரிலும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வானவர்களுக்கு தமிழக மக்கள் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேர்வான கலைஞர்களும் தமிழக அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். கலைமாமணி விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது வழங்கப்படும். அகில இந்திய விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான செக், 3 சவரன் தங்கம் வழங்கப்படும்.
மகாகவி பாரதியார் விருதுக்கு பிரபல எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர் என பன்முறை திறன் கொண்ட மதுரையை சேர்ந்த ந.முருகேசபாண்டியன் தேர்வாகியுள்ளார். மலையாளம், தமிழ் உட்பட பன்ெமாழி திரையிசையில் மட்டுமல்ல... கர்நாடக சங்கீதத்திலும் கொடி கட்டி பறந்த கே.ஜே.யேசுதாஸ்க்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்பட உள்ளது. பிரபல நடன கலைஞரான முத்துக்கண்ணம்மாள், பாலசரசுவதி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான பட்டியலில் எழுத்துலகில் பிரபலமான க.திருநாவுக்கரசு, சிறந்த கவிதைகளை படைத்து வரும் கவிஞர் நெல்லை ஜெயந்தா, பூச்சி எஸ்.முருகன், திரை இயக்குனர்கள் காரைக்குடி நாராயணன், எஸ்.ஜே.சூர்யா, லிங்குசாமி, நடிகை சாய் பல்லவி, கிராமப்புற பாடகரான வீரசங்கர் உள்ளிட்ட 30 பேர் தேர்வாகியுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான பட்டியலில் எழுத்தாளரான சாந்தகுமாரி சிவகடாட்சம், இலக்கிய பேச்சாளரான தி.மு.அப்துல் காதர், மிருதங்க வித்வான் நெய்வேலி ஆர்.நாராயணன், நாடக நடிகர் பொன் சுந்தரேசன், சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான நடிகர் விக்ரம் பிரபு, பிரபல திரைப்பட செய்தி தொடர்பாளரான டைமண்ட் பாபு உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான பட்டியலில், கவிஞர் ஜீவபாரதி, பழம்பெரும் நடிகர் ஜோதி கண்ணன், மிமிக்ரி புகழ் நடிகர் மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், பிரபல இசையமைப்பாளரான அனிருத், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், சிற்பி தீனதயாளன் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர். விருதுக்கு தேர்வான அனைவருக்கும் அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
கல்வியை மட்டுமல்ல... கலைத்துறையையும் உரிய முறையில் திராவிட மாடல் அரசு சிறப்பித்து வருகிறது. கடந்த செப். 13ம் தேதி திரையிசையில் 50 ஆண்டுகளை கடந்ததற்காகவும், சிம்பொனி இசைக்காகவும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. அது மட்டுமல்ல...
இயல், இசை, நாடகத்துறையில் நலிவடைந்த கலைஞர்களை கண்டறிந்து, அவர்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நலத்திட்ட உதவிகளும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் வழி வந்த திராவிட மாடல் அரசானது, கலைஞர்களை போற்றும் அரசாகவும் விளங்கி வருகிறது. அவர்களின் புகழுக்கு மற்றொரு மணி மகுடமாய் விருதுகள் வழங்கியும் பெருமைப்படுத்தி வருகிறது.