கலைஞர் நினைவுநாளில் 2 புதிய திட்டங்கள் தொடக்கம்; 8 புதிய நூல்களையும் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: கலைஞர் நினைவுநாளில் 2 புதிய திட்டங்கள் தொடங்கிவைத்து 8 புதிய நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் , அவர் நினைவைப் போற்றும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்’ மற்றும் `கலைஞர் நிதிநல்கை’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களையும் வெளியிட்டார். 07.08.2025 இன்று காலை 9.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பதிப்பகத்தின் 8 புதிய நூல்களையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில், முதலமைச்சர் , தி.மு.கழக பொதுச் செயலாளர் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
’கலைஞர் மாணவர் பத்திரிகையாளர்’ திட்டத்தின் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார். ’கலைஞர் நிதி நல்கை’ திட்டத்தின் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்ட 8 நூல்களையும் முதலமைச்சர் வெளியிட, தி.மு. கழக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வெ. கணேசன், ஆர்.காந்தி, சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தலைமைக் கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட தி.மு.கழக நிர்வாகிகள், தி.மு.கழக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் இமையம், பத்திரிகையாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் தொடங்கி வைத்தத் திட்டங்கள்:
'கலைஞர் மாணவப் பத்திரிகையாளர்’ திட்டம்
இதழியல் துறைக்கும் திராவிட இயக்கத்துக்குமான நூற்றாண்டு கால பிணைப்பின் அடிப்படையில், பத்திரிகை மீது ஆர்வம் கொண்டு வரும் இளைஞர்களுக்கு, முரசொலி நாளிதழ், கலைஞர் தொலைக்காட்சி வழியாக பயிற்சி அளித்து, அவர்களை மெருகேற்றும் விதமாக, `கலைஞர் மாணவப் பத்திரிகையாளர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வாகும் மாணவர்கள் பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெறுவார்கள்.
'கலைஞர் நிதிநல்கை’ திட்டம்
திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக, `கலைஞர் நிதிநல்கை’ திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். ஆண்டுக்கு 15 இளம் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் தவணை முறையில் நிதிநல்கை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுகள் முத்தமிழறிஞர் பதிப்பகம் வழியாக நூலாக்கம் செய்யப்படும்.
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்கள்
முதலமைச்சர் இந்தித் திணிப்புக்கு எதிராக எழுதிய ’தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ கட்டுரைத் தொகுப்பு, தி.மு.க முன்னாள் மேயர், தியாக மறவர் சி.சிட்டிபாபு தொகுத்து 1975- ஆம் ஆண்டு வெளியான ‘ தி.மு.கழக வரலாறு’ நூல், ’மாநில சுயாட்சி முழக்கம்’, ’இளைய திராவிடம் எழுகிறது’, ’திராவிட இயக்க வரலாறு - கேள்வி பதில்’, ’இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன் ?’, இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல்’, ’இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்’ எனும் தலைப்புகளில் 8 நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.