கலைஞரின் பெரும் முயற்சியால் கல்வி, வேலையில் உயர்ந்த பட்டியலின, பழங்குடியினர்: காங்கிரஸ் கருத்து
சென்னை: கலைஞரின் பெரும் முயற்சியால் கல்வி, வேலையில் உயர்ந்த பட்டியலின, பழங்குடியினர் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில், கலைஞரின் 7ம் ஆண்டு நினைவுநாளில் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை நினைவுகூர்கிறது. 1971ம் ஆண்டில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இருந்த 16 சதவீத இடஒதுக்கீட்டை 18 சதவீதமாக உயர்த்திய கலைஞரை மறக்க முடியுமா? பின்னர், 1990-ம் ஆண்டு பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகவும், பழங்குடியினத்தவருக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கலைஞரை மறக்க முடியுமா?.
அவரது பெரு முயற்சியால்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் இன்றைக்கு உயர்ந்ததை மறக்க முடியுமா? 2008ம் ஆண்டு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய கலைஞரை மறக்க முடியுமா? ஆதிதிராவிடர் பள்ளிகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், தாட்கோ மற்றும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டி தருதல், உயர்கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித்தொகை மற்றும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்கிய கலைஞரை மறக்க முடியுமா? நாட்டிலேயே முதல்முறையாக ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறையும், அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலை கழகமும் அமைத்த கலைஞரை மறக்க முடியுமா?. இந்த நாளில் கலைஞரை நினைவுகூர்வது பட்டியலின, பழங்குடியின, அருந்ததி மக்களின் தலையாய கடமை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.