‘ஆணவம் உண்மையை மறைக்கும்’எடப்பாடியை சாடிய செங்கோட்டையன்
கோபி: தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு பொதுச்செயலாளருமான செங்கோட்டையன் கோபி அருகே கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் தவெக சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது’ என்றார். இதை யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் சொல்லாமல் எழுந்து புறப்பட்டார்.
தொடர்ந்து, நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா கூறியுள்ளாரே என கேட்டதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். 50 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய தன்னை எடப்பாடி நீக்கிவிட்டு, அவரை பற்றி பேச எதுவும் இல்லை என பேட்டி அளித்ததற்குதான் ‘ஆணவம் உண்மையை மறைக்கும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாஜ பிரசார பிரிவு மாவட்ட தலைவர் காந்த் ஈஸ்வரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
* நடிகர் சந்திப்பு
செங்கோட்டையனை திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று மரியாதை நிமித்தமாக செங்கோட்டையனை சந்திக்க வந்தேன். தவெகவில் இணைவது விரைவில் நடைபெறும்’ என்றார்.