அரூர் பகுதியிலிருந்து இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள்
அரூர்: இறைச்சிக்காக அரூர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மாடுகளை லாரிகளில் ஆபத்தான முறையில் கேரளா ஏற்றிச்செல்வது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எருமைகள், மாடுகள் போன்றவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி, லாரிகள் மூலம் ஊத்தங்கரை, அனுமன்தீர்த்தம், அரூர் மற்றும் சேலம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும்போது, வாயில்லா விலங்குகள் கடும் அவதிப்பட்டு செல்கிறது. வனவிலங்கு சட்டப்படி விலங்குகளை லாரி மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது தண்டனைக்குரியதாகும்.
மேலும், வாகனங்கள் மூலம் நீண்ட தூரத்திற்கு விலங்குகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனத்தை முழுவதுமாக தார்ப்பாயினால் மறைத்து உள்ளே விலங்குகள் இருப்பது தெரியாத வகையில் கொண்டு செல்லப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.