ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடையீடடு மனு தாக்கல் செய்திருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிபந்தனைகள் ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், பல்வேறு நிபந்தனைகளுடன் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் ஹரிஹரன் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.