ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஆயுள் கைதி நாகேந்திரனை தவிர 26 பேர் ஜாமீனில் வர வாய்ப்பு
* சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம், சிபிஐக்கு விசாரணை மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரிக்கை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் அருகே, கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சென்னை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதில் கூடுதல் டிஜிபி அருணை சென்னை போலீஸ் கமிஷனராக தமிழக அரசு நியமனம் செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கில் நடத்திய அதிரடி விசாரணையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது சகோதரர் பொன்னை பாலு, கூலிப்படையை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து கூலிப்படை தலைவனாக செயல்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ் உள்பட 11 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்ற ரவுடி திருவேங்கடத்தை கடந்த ஜூலை 14ம் தேதி மணலியில் உள்ள வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பியபோது என்கவுன்டர் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, தனிப்படையினர் காங்கிரஸ் முன்னாள் மாநில நிர்வாகி அஸ்வத்தாமன், வடசென்னை பாஜ மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணை செயலாளர் மலர்க்கொடி, வடசென்னை பிரபல ரவுடியும் ஆயுள் தண்டனை கைதியுமான நாகேந்திரன் என 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு கொலையான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுகிறது. போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் போலீசார் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ 6 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். சிபிஐக்கு இதுபோல் பல்வேறு வழக்குகள் உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் கவனம் செலுத்தி வழக்கை 6 மாதத்தில் முடிப்பது இயலாத காரியம்.
இதனால் இந்த வழக்கை பல ஆண்டுகள் கிடப்பில் போடப்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் என 100க்கும் மேற்பட்ட போலீசார் புலன்விசாரணை நடத்தி கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களிலேயே 27 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றே மூத்த வழக்கறிர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு முக்கிய வழக்கு, பொதுவெளியில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு. கைது செய்யப்பட்ட 27 பேரும் ஒவ்வொரு கட்சியில் முக்கிய பிரமுகர்களாக இருந்தவர்கள். அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரில், ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரனை தவிர மற்ற 26 பேரும் ஜாமீனில் வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து செய்ததால், அரசியல் அதிகாரம் மற்றும் குற்றப் பின்னணியில் உள்ள நபர்களான 26 பேரும் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புகள் பிரசாசமாக உள்ளது.
ஒருவேளை 26 பேரில், அரசியல் பின்புலம் உள்ள முக்கிய நபர்கள் யாரேனும் ஜாமீனில் வெளியே வந்தால் பழிவாங்கும் படலம் தொடரலாம். இருதரப்புக்கும் இடையே பகை உணர்வு இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதை உளவுத்துறையும் பல நேரங்களில் உறுதி செய்துள்ளது. இதனால் சென்னையில் மீண்டும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது. மேலும், கைது செய்யப்பட்ட 27 பேரும் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பதால் அவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் கடல் மார்க்கமாகவும் தப்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சென்னை காவல்துறை பதற்றத்தில் உள்ளது.
எனவே, சிபிஐக்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கில் சிறையில் உள்ள கொடுங்குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும். அவர்கள் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி ஜாமீனில் வெளியே வந்தால் தமிழக போலீசாருக்கு தான் தலைவலி, சிபிஐக்கு அல்ல என்று காவல்துறையினரும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.