ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.முத்தமிழ் செல்வக்குமார், 360 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டும், உடல் நலனை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர், பொற்கொடி ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதோடு அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொற்கொடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.