ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் சப்ளை பாஜ முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் சப்ளை செய்த விவகாரத்தில் பாஜ மாஜி நிர்வாகி அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் மாஜர்கான் (44), ரியல் எஸ்டேட் மற்றும் வீடு புரோக்கர். இவர் தனது குடும்ப செலவுக்காக புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 5வது தெருவை சேர்ந்த பாஜ நிர்வாகியும் பெண் ரவுடியுமான அஞ்சலை (48) என்பவரிடம் கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் 40% வட்டிக்கு ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு மாதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 5 மாதம் 8 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
ஆனால், அஞ்சலை மற்றும் அவரது ஆட்கள் மேலும் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மாஜர்கானை மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து மாஜர்கான் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து அஞ்சலை உள்ளிட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை பெருநகர 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரேவதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது அஞ்சலைக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சாதாரண தண்டனையும், ரூ.13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பிரிவின் கீழ் ஓராண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனிடையே அபராத தொகை 13 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்திய அஞ்சலை இன்னும் ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்யப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
* யார் இந்த அஞ்சலை?
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அஞ்சலை சிறு வயதிலேயே வடசென்னையாக புளியந்தோப்பு பகுதிக்கு வந்துள்ளார். ஆடுதொட்டி பகுதியில் கழிவுகளை தூய்மை செய்யும் பணியில் இவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆடுதொட்டி பகுதியில் ஆடு, மாடு வாங்கி விற்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட அஞ்சலை தொடங்கினார். இதில் நல்ல வருமானம் வரவே, பெரிய ஆட்களின் நட்பு கிடைத்தது. தொடர்ந்து, தனது வட்டி தொழிலை விரிவுபடுத்தி உள்ளார்.
புளியந்தோப்பு பகுதியில் யார் வியாபாரம் செய்ய வந்தாலும் பணம் இல்லை என்றால் அஞ்சலையை சென்று பாருங்கள். அவர் பணம் தருவார் என கூறும் அளவுக்கு வட்டி தொழிலில் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ராயப்பேட்டை பகுதியில் உள்ள சிவில் சப்ளை குடோனில் வட்டி தொழிலில் இறங்கினார். அப்போது அங்கு வேலை செய்து வந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேசுக்கும் அஞ்சலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு கணவரை விடுத்து ஆற்காடு சுரேசுடன் அஞ்சலை குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அரிசி கடத்தல் சம்பந்தமாக நடந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது, சிறையில் ஆந்திராவை சேர்ந்த சின்னா என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆற்காடு சுரேஷை பார்ப்பதற்காக அஞ்சலை அடிக்கடி சிறைக்கு செல்லும்போது சின்னாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல ரவுடிகளின் சகவாசம் அஞ்சலைக்கு கிடைத்துள்ளது. மேலும் ஆற்காடு சுரேஷ் மூலம் ஆந்திராவில் பல பகுதிகளில் அஞ்சலை வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வந்துள்ளார். அஞ்சலையின் வட்டி தொழில் மற்றும் அரசு கான்டிராக்டர் ஆகியவற்றில் ஆற்காடு சுரேஷ் தலையீடு அதிகமாக இருந்ததால் ரவுடி சின்னா தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து சின்னா, அவரது வழக்கறிஞர் பகவத்சிங் ஆகிய இருவரையும் ஆற்காடு சுரேஷ் தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். இதன்பிறகு சின்னாவின் நெருங்கிய கூட்டாளி துரையை புளியந்தோப்பு பகுதியில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்தார். இந்த கொலைகளுக்கு பின்னணியில் அஞ்சலையின் தூண்டுதல் இருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஆற்காடு சுரேஷ் ஜெயிலுக்கு செல்லும்போது அஞ்சலை பணத்தை செலவு செய்து அவரை காப்பாற்றி வந்துள்ளார்.
பின்னர் தன்னை மேலும் பிரபலப்படுத்திக்கொள்வதற்காக கோயில்களுக்கு நன்கொடை வழங்குவது, திருநங்கைகளுக்கு உதவி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதன்பிறகு பாஜவில் சேர்ந்ததும் மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. பிறகு வடசென்னை மேற்கு மாவட்ட துணை தலைவி பொறுப்பு கிடைத்தது. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர் அஞ்சலை சிறிது காலம் அமைதியாக இருந்தார். மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தரப்பினர்தான் காரணம் என்று நினைத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் வரை நிதி உதவி செய்ததாக அஞ்சலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடத்துக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த அஞ்சலைக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.