மணிப்பூர் உட்பட 3 வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மீண்டும் நீட்டிப்பு: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ‘பதற்றமான பகுதிகள்’ என அறிவிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த சட்டத்தின்படி, வாரண்ட் இன்றி சோதனை நடத்த, கைது செய்ய மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரம் அளிக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் இந்தச் சட்டம், வடகிழக்கு மாநிலங்களில் நீண்டகாலமாக அமலில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் நீடித்து வரும் இனக்கலவரம் மற்றும் 2025 பிப்ரவரி முதல் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி ஆகியவற்றால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இப்பகுதிகளில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவின்படி, மணிப்பூரில், 5 மாவட்டங்களில் உள்ள 13 காவல் நிலையங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில், 9 மாவட்டங்கள் முழுவதுமாகவும், கோஹிமா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையப் பகுதிகளிலும் இந்தச் சட்டம் அமலில் இருக்கும். அருணாச்சலப் பிரதேசத்தில், திராப், சாங்லாங், லாங்டிங் ஆகிய மாவட்டங்களிலும், அசாம் எல்லையை ஒட்டிய சில பகுதிகளிலும் இந்த நீட்டிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.