மாதவரத்தில் போதையில் இளைஞர்களுக்குள் தகராறு; பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் படுகொலை: நண்பர்கள் 4 பேர் கைது
மாதவரம்: மாதவரத்தில் மதுபோதையில் வடமாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வாலிபரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பிய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் மாதவரம் தட்டான்குளம் சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீரஜ்குமார் (19), இவரது நண்பர்கள் 4 பேர் வாடகை வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் தினக்கூலியாக 2 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கம்பெனியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு, பின்னர் நண்பர்கள் 5 பேரும் தங்கள் அறைக்கு திரும்பினர். வரும்போதே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி வந்துள்ளனர். அன்று மாலையில் மது அருந்த துவங்கி நள்ளிரவு வரை மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் நண்பர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பீர்பாட்டிலை எடுத்து நீரஜ் குமாரை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நீரஜ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து பயந்துபோன நண்பர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து, வரவழைத்து மயங்கிய நிலையில் இருந்த நீரஜ்குமாரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே நீரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில், மாதவரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்து விட்டு தப்பிய நண்பர்கள் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.