அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் கேரளா வருகிறார் மெஸ்ஸி: நவம்பரில் நடக்கும் போட்டியில் பங்கேற்பு
பியனஸ் அயர்ஸ்: ஃபிபா சர்வதேச ஃப்ரெண்ட்லி கால்பந்தாட்ட போட்டியில், கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கேரளா அணியும், வரும் நவம்பரில் மோதவுள்ளன. அர்ஜென்டினா தேசிய கால்பந்தாட்ட அணிக்கு, கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்தாட்ட தேசிய அணி, கேரளாவில், வரும் நவம்பரில் நடக்கும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளதாக, அர்ஜென்டினா கால்பந்தாட்ட சங்கம் (ஏஎப்ஏ) நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. தவிர, அங்கோலா, லுவாண்டா ஆகிய நாடுகளிலும் இரு நட்பு ரீதியிலான போட்டிகளில் அர்ஜென்டினா தேசிய அணி பங்கேற்கும் என ஏஎப்ஏ அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளனர்.
கேரளாவில் கால்பந்தாட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் மெஸ்ஸி தலைமையிலான கால்பந்தாட்ட அணியை கேரளாவுக்கு வரவழைக்க, அம்மாநில விளையாட்டு துறை தீவிரம் காட்டி வந்தது. அந்த முயற்சிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், தற்போது கேரளாவில் கால்பந்தாட்ட போட்டியில் ஆட உள்ளதாக அர்ஜென்டினா கால்பந்தாட்ட சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, கேரள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.