அர்ஜென்டினாவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து படுகொலை: இன்ஸ்டாவில் நேரலையாக ஒளிபரப்பிய கொடூரம்
புவனெஸ் அயர்ஸ்: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் கடந்த 19ம் தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா குட்டிரெஸ் (15) ஆகிய மூன்று இளம்பெண்களை ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது.
புவனெஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், அங்கு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவன், தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 45 பேருக்கு நேரலையாக ஒளிபரப்பியுள்ளான். போதைப்பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் அவன் இதைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காணாமல் போன ஐந்து நாட்களுக்குப் பிறகு, தற்போது மூன்று பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அர்ஜென்டினாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த போராட்டத்தில், இக்கொலையை ‘போதைப்பொருள் சார்ந்த பெண்ணியப் படுகொலை’ என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், ‘எங்கள் உயிர்கள் தூக்கி எறியப்படுபவை அல்ல’ என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த நேரலை சம்பவம் தங்கள் தளத்தில் நடைபெறவில்லை என இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், தனிப்பட்ட குழுவிற்கு இந்த கொலைகள் நேரலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.