ஆற்காடு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி
ஆற்காடு : ஆற்காடு- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ஆற்காடு உட்கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு-திண்டிவனம் சாலைஇரண்டு வழி சாலையாக உள்ளது.
இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி அகலப்படுத்த முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25 ல் பணிகள் மேற்கொள்ள கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி நேற்று நேரில் சென்று சாலை பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கள ஆய்வு செய்தார். மேலும் இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, சாலை மேம்பாட்டு பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செல்வகுமார், திருவண்ணாமலை நெடுஞ்சாலை தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சரவணன், ஆற்காடு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் க.சரவணன், ராணிப்பேட்டை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டபொறியாளர் ஆர். பிரகாஷ் ஆற்காடு உட்கோட்ட உதவி பொறியாளர் வடிவேல் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.