தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு
கும்பகோணம் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேஸ்வரர் வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான ஆலயத்தில் திருப்பணி தொடங்க அகில பாரத இந்து மகா சபா சார்பில் வலியுறுத்தி திருச்சி மத்திய தொல்லியல்துறை அலுவலகத்தில் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளிக்கப்பட்டது.
இந்திய தொல்லியல் துறை திருச்சி சரகம் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் ராகுல் போஸ்லே வரலாற்று சிறப்புமிக்க தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருப்பணி தொடங்குவதற்கும், நிர்வாக சீர்கேடை சரி செய்வதற்கும் நேற்று ஆய்வு செய்ய வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அகில பாரத இந்து மகா சபாவின் கோரிக்கையை ஏற்று தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு ஆய்வாளர் ராகுல் போஸ்லே ஆய்வு செய்வதற்கு வந்திருந்தார்.
அப்போது ராஜகோபுரம் சீரமைப்பு, கோயில் சுற்றி தண்ணீர் தேங்குவதை தடுப்பது மற்றும் மழைக்காலங்களில் ஆலய வாசலில் தண்ணீர் தேங்கினால் அதனை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது, கோயில் சுவர் முழுவதும் விரிசல்களை சரி செய்வது, கோயிலை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, கோயில் சுற்றி கிரிக்கெட் விளையாடுவதை தடுப்பது, செக்யூரிட்டி சர்வீஸ் ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பது, கோவில் முழுவதும் வர்ணம் பூசுதல், கண்காணிப்பு கேமரா, பழுதான மின்சார பாகங்களை சரி செய்வது,
கோயிலை சுற்றி காதல் ஜோடிகள் இருப்பதை வந்திருந்த அதிகாரி பார்த்து அதற்காக உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், ராஜகோபுரம் சரி செய்து அதன் வழியாக ஆலயத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பது, கோயில் வெளிப்புறத்தில் கட்டடம் சரி செய்தல், கழிவறை, தண்ணீர் வசதி, கண்காணிப்பாளர் அறை அமைத்தல், கோயில் கிரில் கேட் வர்ணம் பூசுதல் மற்றும் அதன் மீது பொதுமக்கள் துணியை போட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கோயில் வாசலில் இந்து சமய அறநிலையத்துறை கடை வைத்ததாக சொல்லியிருக்கும் நபரை அகற்ற நடவடிக்கை எடுப்பது, இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து திருப்பணி மேற்கொள்வதற்கு அனைத்து அனுமதியும் விரைந்து வழங்குவது, கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் வைப்பது.
உள்ளிட்ட கோரிக்கையையும் சரி செய்து வரும் 2028 மகாமகத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடித்து தருகிறேன் என இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் இராம நிரஞ்சனிடம் வாக்குறுதி அளித்து சென்றார்.