ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்: அரசு சார்பில் மரியாதை
திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு சார் ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த பொறியாளர் தனுஷ்நாத் (26) புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிப்பு தொழிற்சாலை கட்டுமான பணிகளில் பணியாற்றி வந்தார். கடந்த 7ஆம் தேதி சுமார் 15அடி உயரத்தில் பணியில் இருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரணியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தனுஷ்நாத் உடலுக்கு பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.