ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் குறுகலான சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் வாகனங்கள்
*முள்புதர்களை அகற்றி விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ஆரணி : ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் குறுகலான சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் சிரமம்பட்டு வருகிறது. இதனால் முள்புதர்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர்-வேதாஜிபுரம் சாலை வெட்டியாந்தொழுவம் காப்புக்காட்டு வழியாக செல்கிறது.
இந்த சாலை ஆரணியில் இருந்து முள்ளண்டிரம், காவனூர், வேதாஜிபுரம், பூசிமலைக்குப்பம், 12.புத்தூர், கே.கே.தோப்பு, கிட்டங்குடிசை, கிருஷ்ணாவரம், எம்பி தாங்கல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலையில் தினமும் அரசு, தனியார் பஸ்கள், பள்ளி பஸ்கள், இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. பல ஆண்டுகளாக வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டின் வழியாக செல்லும் தார்சாலையின் இருபுறமும் முள்புதர்கள், செடிகள், மரங்கள் அதிகளவில் வளர்ந்து சாலையில் பரவியுள்ளது.
மேலும் இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் பகலில் கூட இந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எதிர் திசையில் வரும் வாகனங்களை கடந்து செல்லும்போது முள்செடிகளில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர்.
எனவே இந்த சாலையில் படர்ந்துள்ள முள்புதர்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் நெடுஞ்சாலைதுறையினர், செடி கொடிகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய முயன்றால், வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணிகள் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வெட்டியாந்தொழுவம் வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் சாலையின் இருபுறங்களில் வளர்ந்துள்ள முள்புதர்கள், மரங்கள் அகற்றி, சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.