ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கன்று விடும் விழாவில் சீறிப்பாய்ந்த இளங்காளைகள்
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு 2ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350க்க்கும் மேற்பட்ட இளங்காளைகள் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, ஓடும் பாதையில் மண் கொட்டப்பட்டு, இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கன்று விடும் விழா தொடங்கியது. ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடின. இளைஞர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் இளங்காளைகளை விரட்டி சென்றனர்.
தொடர்ந்து, குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த இளங்காளைக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.20 ஆயிரம், 4வது பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் 33 பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
விழாவில் காளைகள் முட்டி காயமடைந்தவர்களுக்கு ஆக்கூர் ஆரம்ப சுகாதார் நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த நபர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி தாலுகா போலீசார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஆரணி தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.