ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி : ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு, கிணறுகள் அமைத்து மேல்நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் உப்பு நீராக வந்துள்ளது.
இதனால், தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவதால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த சில தினங்களாக குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு பிடிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால்ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரணி - வந்தவாசி செல்லும் சாலையில் திடீரென காலி குடங்களுடன் மறியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன், தாலுகா போலீஸ் எஸ்ஐகள் அருண்குமார், கணேசன், மகாரணி, எஸ்எஸ்ஐ கோட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை வரை மறியலை கைவிடமாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், அங்குவந்த டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் மற்றும் பிடிஓ விஜயலட்சுமி, அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் விரைவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.