அரக்கோணம் அருகே தார் பிளாண்டில் மூலப்பொருட்களை மாற்றியபோது டேங்கர் லாரியில் பயங்கர தீ
அரக்கோணம்: அரக்கோணம் அருகே உள்ள தார் பிளாண்ட்டில், மூலப்பொருட்களை மாற்றிக்கொண்டிருந்தபோது டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி-பாளையார்கண்டிகை பகுதியில் தார்பிளாண்ட் உள்ளது. சென்னையில் இருந்து டேங்கர் லாரி மூலம் தார்கலவை செய்வதற்கான மூலப்பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது.
சுமார் 7.45 மணியளவில் ஊழியர்கள், டேங்கர் லாரியில் இருந்து தார்பிளாண்ட்டில் உள்ள தொட்டிக்கு மூலப்பொருட்கள் மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர். இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் டேங்கர் லாரி எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டேங்கர் லாரி எப்படி தீப்பிடித்தது என்பது குறித்தும், லாரி உரிமையாளர், தார்பிளாண்ட் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.