அரக்கோணம்-சேலம் மெமு விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணியளவில் புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும். பின்னர் சேலத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ரயிலை கடந்த 8ம்தேதியன்று முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, பராமரிப்பு காரணமாக மெமு ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் தடையில்லாமல் இயக்க பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.