அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்
அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் ராமாபுரம், மேட்டுசித்தாம்பாடி, சித்தாம்பாடி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் சித்தாம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு ஏரிக்கரையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை மேல் ஏற்கனவே சாலை வசதி உள்ளது. ஆனால், தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்வர்கள், ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கி செல்பவர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், அவசர நேரத்தில் இந்த வழியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.