அரக்கோணம் நகரில் ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்
*பைக் திருடும் சிசிடிவி காட்சி வைரல்
அரக்கோணம் : அரக்கோணம் நகரில் ஹெல்மெட் அணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 பைக்குகளை ஹெல்மெட் அணிந்த 3 மர்ம நபர்கள் திருடிச்செல்வது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பைக் திருட்டில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த 2 நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 பைக்குகள் திருடு போனது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அரக்கோணம் பகுதியில் தொடர் ஹெல்மெட் கொள்ளையர்களின் அட்டகாசம் நடந்து வருகிறது. சமீபத்தில், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியையின் கழுத்தில் இருந்து தாலிச்சரடை ஹெல்மெட் கொள்ளையன் பறித்து சென்ற சம்பவம் நடந்ததுள்ளது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால், போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.