அரபிக்கடல் பகுதியில் நிலவிய சக்தி புயல் வலுவிழக்கிறது தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: அரபிக்கடல் பகுதியில் நிலவிய சக்தி புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும். தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல் நேற்று காலை 5.30 மணி அளவில் அதே பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி, பிறகு கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்ககூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், ஏனைய மத்தியமேற்கு அரபிக்கடலின் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்குமத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு,
ஏனைய வடக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒசூரில் தலா 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திண்டுக்கல்லில் 11 செ.மீ, அவலூர்பேட்டை, செம்மேடு, கீழ்பென்னாத்தூரில் தலா 10 செ.மீ, முண்டியம்பாக்கம், (விழுப்புரம்), தர்மபுரியில் தலா 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.