தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளை துவக்கியது ஆணையம்; 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர் நியமனம்: தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதே கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் தமாகா, அன்புமணி தலைமையிலான பாமக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோரும் தனியாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை மனதில் வைத்து கடந்த சில மாதங்களாகவே கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து வருகிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்ேதாறும் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தவெக தலைவர் விஜயும் சுற்றுப்பயணம் மேற்கொண்டோர். கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து அவரது பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் அவர் பயணத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளார். அதேபோல் சீமான், தேமுதிக தலைவர் பிரேமலதா, அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகிய தலைவர்களும் மக்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். கட்சிகள் தேர்தல் பணிகளை துவக்கி விட்ட நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை சில மாதங்களுக்கு முன்பே துவக்கி விட்டது. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், வாக்காளர் இறுதி பட்டியல் வௌியிடப்படும். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் அளவிலான அதிகாரிகள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி முதல்வரின் கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக, கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளர், எடப்பாடி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக, சேலம் கலால் துறையின் உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலைத் தங்கள் தொகுதிக்குள் உரிய தேர்தல் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி நேர்மையாகவும், திறம்படவும் நடத்துவதற்குப் பொறுப்பாவார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதாக பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.