சென்னையில் ரூ.27.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 162 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.8.2025) கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் 7.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கத்தை திறந்து வைத்து, 2025-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும், கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 27.71 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 162 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பேருந்து நிலையங்களை திறந்து வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு முதற்கட்டமாக ரூ.104.43 கோடி மதிப்பீட்டில் 248 புதிய BS-VI மகளிர் விடியல் பயண பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 74.50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன பெண்கள் உடற்பயிற்சி மையம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் 12 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்;
2023-24ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு வளர்ச்சியினை தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு "முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" எனப் பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் 0.61 ஏக்கர் பரப்பளவில் 7.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார். கொண்ட இந்த முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம். 25 x 12.5 மீட்டர் வடிவில் உள்விளையாட்டரங்கம். நீச்சல் குளம், இரண்டு இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்விளையாட்டரங்கம். உடற்பயிற்சி செய்யும் பகுதி. மேலாளர்/பயிற்றுநர் அறை, உடை மாற்றும் அறை, சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தல்;
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2025 (Chief Minister's Trophy Games 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 25.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அயனாவரம் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள். பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மொத்தம் 83.37 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மொத்தம் 16,28,338 வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும். 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும். அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல்;
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய 84 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.9.2023 அன்று இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டு, 84 குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம், மொத்தம் 20.16 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் ஒரே தொகுப்புகளாக 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 27.71 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களுடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்புகளிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் தனி கழிவறை வசதிகளுடன் 410 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதியில் 3 மின்தூக்கிகள், கான்கிரிட் சாலைகள், தெரு விளக்குகள். குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து வசதிகளும் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பின் மதிப்பீடு 17.10 இலட்சம் ரூபாயாகும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பேருந்து நிலையங்களை திறந்து வைத்தல்;
பெரியார் நகர் பேருந்து நிலையம்;
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் 1.01 ஏக்கர் பரப்பளவில் 12.40 கோடி ரூபாய் செலவில் 12,090 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்பேருந்து நிலையத்தில், 8 கடைகள். 3 நடைமேடைகள். 12 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள், தனியார் அலுவலகங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு பகுதி. போக்குவரத்துத் துறைக்கான டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் அலுவலகங்கள். ATM வசதிகள், பயணிகள் இருக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகர் பேருந்து நிலையம்;
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் 0.49 ஏக்கர் பரப்பளவில் 6 கோடி ரூபாய் செலவில் 3,400 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்பேருந்து நிலையத்தில், 10 கடைகள், 4 நடைமேடைகள். 12 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள், தனியார் அலுவலகங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை. பயணிகள் காத்திருப்பு பகுதி, போக்குவரத்துத் துறைக்கான டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் அலுவலகங்கள், ATM வசதிகள், பயணிகள் இருக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
248 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்;
சென்னையில் நாள்தோறும் சுமார் 12 இலட்சம் பெண் பயணிகள் மகளிர் விடியல் பயண பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுகிறார்கள். அவர்களின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 104.43 கோடி மதிப்பீட்டிலான புதிய 248 BS-VI மகளிர் விடியல் பயண பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன பெண்கள் உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தல்;
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம். ஜி.கே.எம் காலனி 24 A-ல் உள்ள குளம் மற்றும் பூங்காவில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் கீழ் 74.50 இலட்சம் ரூபாய் செலவில் 1272 சதுர அடி பரப்பளவில், குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டுள்ள நவீன பெண்கள் உடற்பயிற்சி மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சி மையத்தில் 2 டிரெட்மில், சைக்கிளிங், பளு தூக்கும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களும், நீராவி குளியல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் திறந்து வைத்தல்;
கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, 24A அம்மன் கோவில் தெரு பூங்கா பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் 12 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்பணிக்கு, விநியோகக் குழாயிலிருந்து 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகளில் தண்ணீரைச் சேகரித்து, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும் புறஊதா கதிர்கள் மூலம் சுத்திகரித்து, துருப்பிடிக்காத எஃகு தொட்டிகளில் சேகரிக்கப்படும். இந்த குடிநீர் விநியோக இயந்திரங்களின் செயல்பாடு நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கப்படும். தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படும். இந்த தானியங்கி குடிநீர் விநியோக அலகுகள் மூலம் பொதுமக்கள் 1 லிட்டர் பாட்டில் மற்றும் 150 மில்லி டம்ளர் மூலம் இலவசமாக குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா. போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.