மகாதமனி துளையை அடைத்ததற்காக விருது; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய இடையீட்டு சிகிச்சை: கலக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை
சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனை இதயவியல் பிரிவு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட இதய இடையீட்டு சிகிச்சை செய்துள்ளது. மேலும் மகாதமனி துளையை அடைத்ததற்காக விருதும் பெற்று உள்ளது.இதயம், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பு, உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக விளங்குகிறது. ஆனால், இதயத்தில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட பெரும் உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம். அவற்றில் ஒரு முக்கியமான நிலை, “இதய மகாதமனியில் ஓட்டை” என்று அழைக்கப்படும் மருத்துவ நிலை, இது மருத்துவ உலகில் கவனம் பெறுகிறது.
உடல் முழுவதும் சுத்தமான ரத்தத்தை எடுத்து செல்லும் இந்த மகாதமனி ஆரோக்கியமாக செயல்படும் வரை உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக தங்கள் பணியை செய்யும். இதில் சிறு பிரச்னை ஏற்பட்டால் இதயமும் பாதிப்பை எதிர்கொள்ளும். ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக இருந்தால் அது மகாதமனியின் உட்சுவரில் படிந்து அங்கேயே தங்கி ரத்தக்குழாய்களின் சுற்றளவை குறைக்க செய்கிறது. இது ஒரு விதம். இதுபோல் உடைதல், கிழிதல் போன்ற பல வகைகளில் மகாதமனி பிரச்னைகள் வரலாம்.
இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, இந்த மகாதமனி ஓட்டைக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து விருது பெற்றுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையின் இயக்குநர் மணி வழிகாட்டுதலோடு இதயவியல் பிரிவு, அதிநவீன வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் இலவசமாக சிகிச்சைகள் மூலம் இதய நோய்களுக்கு உயர்தர சேவைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக ஓமந்தூரார் மருத்துவமனை இதய பிரிவை பொறுத்தவரையிலும் 24 மணி நேரமும் சிறப்பு இதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. 7 தீவிர சிகிச்சை பிரிவுடன் 100க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. குறிப்பாக ஒரு நாளுக்கு 15 வகையான இதய இடையீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயது குறைவான நபருக்கும், வயது முதியவருக்கும் மகாதமனி ஓட்டை அடைத்ததற்காக ஆசிய பசிபிக் வாஸ்குலர் தலையீட்டு கவுன்சிலில் விருது பெற்றுள்ளது.
இதுதொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனை இதயத்துறை தலைவர் மருத்துவர் சிசிலி மேரி மஜெல்லா கூறியதாவது:ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு இதய இடையீட்டு சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனையின் இயக்குநர் மணியின் ஒருங்கிணைப்பின் கீழ் இதனை சாத்தியமாக்கியுள்ளோம். சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் எலக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டன. மொத்தம் 228 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.
இதயத்தில் உள்ள துவாரங்களை (ASV) அறுவை சிகிச்சையின்றி அடைக்க ரத்த குழாய் மூலம் ஏஎஸ்டி கருவியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சை 326 பேர் பயனடைந்துள்ளனர். இதில், அதிகளவில் இளம்பெண்கள் பயன்பெற்று மறுநாள் வீடு திரும்பி உள்ளனர். அதேபோன்று, இதயத்தின் மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பிடிஎம்சி சிகிச்சை மூலம் 531 பேர் பலனடைந்துள்ளனர். முக்கியமாக மகாதமனி கிழிசலை சரிசெய்யும் ஆர்எஸ்ஓவி என்ற சிகிச்சை 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக விருது மற்றும் பாராட்டு கிடைத்துள்ளது.
உலகத்தில் அரிய மருத்துவ செயல்முறை ஓமந்தூரார் மருத்துவமனையில் மேற்கொண்டு உள்ளோம். அதனால் ஆசிய பசிபிக் வாஸ்குலர் தலையீட்டு கவுன்சில் (asia pacific vascular intervention council) விருது வழங்கி உள்ளது. உலகில் உள்ள அனைத்து நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் இதற்கு நடுவர்களாக இருந்தனர். 700க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கப்பட்டது. அதில் ஓமந்தூரார் மருத்துவமனையில் மேற்கொண்ட உயிர் காக்கும் மிக அரிய இதய தலையீடு செயல்முறை மேற்கொண்டதால் இந்த விருது கிடைத்துள்ளது. இந்த செயல்முறையில் இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த குழாய் வழியாக உயிர் காக்க மேற்கொள்ளப்படும் அரிய செயல்முறை.
குறிப்பாக ஓமந்தூரார் மருத்துவமனை இதயத்துறை சார்பில் இதய மகாதமனியில் ஓட்டைக்கு சிறப்பான சிகிச்சை அளித்துள்ளது. அதுகுறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதால் இந்த விருது மற்றும் பாராட்டு கிடைத்துள்ளது. 22 வயது இளைஞருக்கு மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக பல மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு மகாதமனியில் ஓட்டை இருக்கிறது என்று கூறி சிகிச்சை அளித்துள்ளனர். முறையாக சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவர் இதய மகாதமனியில் 2 ஓட்டை இருப்பது தெரியவந்துள்ளது. இது, ஒரே மருத்துவ செயல்முறையில் ஆம்ப்ளாட்ஸர் டக்ட் ஆக்லூடர் (ADO-1) என்ற கருவியை பயன்படுத்தி அடைக்கப்பட்டது. பொதுவாக இரண்டு கருவிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் நாங்கள் ஒரே கருவியை பயன்படுத்தி அடைத்தோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இந்த செயல்முறைக்காக நேரம் எடுத்துக்கொண்டது. தற்போது அவர் நலமுடன் கல்லூரி செல்கிறார். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அதேபோல ரத்த அணுக்கள் குறைவாக, இதய பிரச்னை, கல்லீரல் பிரச்னையுடன் இருந்த 73 வயதான நபருக்கு இதே பாதிப்புடன் இருந்துள்ளார். அந்த வயதான நபர் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அங்கு எல்லாம் பலன் அளிக்காமல் இங்கு வந்துள்ளார். அவருக்கும் இந்த கருவியை பயன்படுத்தி முழுமையாக குணப்படுத்தப்பட்டது. உலகில் மிக வயதான நபருக்கு இந்த மருத்துவ செயல்முறை செய்தது இதுவே முதன்முறை. அந்த பெருமை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சேரும். மேலும் இந்த மருத்துவ செயல்முறை செய்த தினம் தான் அந்த முதியவரின் பிறந்த நாள். தற்போது நலமுடன் இருக்கிறார்.
ஓமந்தூரார் மருத்துவமனை இதயத்துறை சார்பில் இதுவரை 30,000 மேற்பட்ட இதய இடையீட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதய ஓட்டையில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் அதிகமாக 34 மில்லிமீட்டர் அளவு கொண்ட ஓட்டையை அடைத்துள்ளோம். ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 5 முதல் 6 லட்சம் செலவு ஆகும் ஆனால் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.