தாய்லாந்து புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தேர்வு
பாங்காக்: தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டார்.தாய்லாந்து பிரதமராக இருந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா கடந்த ஜூன் மாதம் கம்போடிய தலைவர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது எல்லை பிரச்னை தொடர்பாக ஹன் சென்னிடம் சமரசம் செய்யும் வகையில் பேசினார். மேலும் தாய்லாந்து நாட்டு ராணுவ தளபதியை பற்றியும் விமர்சித்தார். இது தொடர்பான உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த பும்ஜெய்தாய் கட்சி விலகியது. இதனால் நாடாளுமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தது. இது தொடர்பான பிரச்னை பெரிதாகி கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டு 35க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கம்போடிய தலைவருடன் பேசியது தொடர்பான வழக்கை விசாரித்த தாய்லாந்து நீதிமன்றம் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டம் நேற்று கூடியது. இதில் பும்ஜெய்தாய் கட்சி தலைவர் அனுதின் சார்ன்விரகுல்(58) 247க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பியூ தாய் கட்சியைச் சேர்ந்த சாய்காசெம் நிதிசிரி குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.தொழிலதிபரான அனுதின் இதற்கு முன்னர்,துணை பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தாய்லாந்தில் கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிக்கும் திட்டத்தின் பின்னணியிலும் அவர் இருந்தார்.