தேச விரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் இந்தியாவில் நுழைய அனுமதி கிடையாது: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு
புதுடெல்லி: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
எந்தவொரு வகையான விசா விண்ணப்பிப்பவர்களும், வெளிநாடு வாழ் இந்தியராக பதிவு செய்பவர்களும் தங்கள் விசா அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பாக பயோமெட்ரிக் தரவுகளை கட்டாயம் வழங்க வேண்டும். இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை நாடு கடத்தும் வரை தடுப்பு மையம் அல்லது முகாம்களில் அடைக்கப்படுவார்கள். இதற்காக மாநிலங்கள் தடுப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
தேச விரோத நடவடிக்கைகள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், தீவிரவாதம் மற்றும் நாசவேலை நடவடிக்கை, ஹவாலா, பணமோசடிக்கு உதவி செய்தல், போதைப் பொருள் கடத்தல், குழந்தை கடத்தல் உள்ளிட்ட மனித கடத்தல், போலி பயண ஆவணங்கள், டிஜிட்டல் கரன்சி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர் இந்தியாவிற்குள் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதி மறுக்கப்படும்.
மேலும், வேலைவாய்ப்பு விசா பெற்ற வெளிநாட்டினர் தனியார் மின்சாரம், நீர் வழங்கல், பெட்ரோலியத் துறைகளில் சிவில் அதிகாரிகளின் அனுமதியின்றி வேலை செய்ய முடியாது. திரைப்படம், ஆவணப்படம், ரியாலிட்டி தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை தயாரிக்க, உதவ தேவையான சிறப்பு அனுமதி பெற வேண்டும். அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் உத்தரகண்ட், லடாக், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் என தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டினர் நுழைய அனுமதி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனாவை சேர்ந்தவர்கள் இத்தகைய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.