தீபாவளிக்கு எதிரான கருத்தால் சர்ச்சை; உங்கள் திருமணத்தில் பட்டாசு வெடித்தது தெரியாதா..? நடிகரின் மனைவிக்கு நெட்டிசன்கள் கேள்வி
மும்பை: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த நடிகர் ஷாகித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்தச் சூழலில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத், கடந்த 22ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ‘பட்டாசு வெடிப்பதை சாதாரணமாக மாற்றுவதை ஏன் இன்னும் நிறுத்தவில்லை? குழந்தைகளுக்காகத்தான் செய்கிறோம் என்பதை ஏற்க முடியாது. நமது குழந்தைகள் சுவாசிக்கும் காற்றின் தரக் குறியீடு குறித்து நாம் கவலைப்பட வேண்டும். புவி தினத்தில் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசிவிட்டு, தீபாவளியின்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஏன்?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மீரா ராஜ்புத்தின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரது இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, அவரது திருமணத்தின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், ‘சொகுசுக் கார்களில் பயணம் செய்வது, குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விமர்சனங்களால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.