ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை: கணக்கில்வராத ரூ.1.24 லட்சம் பறிமுதல்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போக்குவரத்துதுறை சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத 1 லட்சத்து 24,900 ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து சோத னைச்சாவடி (ஆர்டிஒ செக்போஸ்ட்) உள்ளது. இந்த சோதனை சாவடி ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ளதால், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் ஊத்துக்கோட்டை சோதனை சாவடிக்கு வந்து, இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து சோதனைச்சாவடி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ₹1 லட்சத்து 24,900 கைப்பற்றப் பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையால் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் பரபரப்பு நிலவியது.