அண்ணாமலைக்கும், எனக்கும் சண்டையை மூட்டுகிறீர்கள்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், எனக்கும் சண்டையை மூட்டுகிறீர்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயுமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நீங்கள் தலைவரா, அண்ணாமலை தலைவரா என்ற விமர்சனங்கள் பொது வெளியில் எழுந்துள்ளதே என்று கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கேட்கிற கேள்வியே சரியில்லை.
நீங்கள் தலைவரா, அவர் தலைவரா என்று கேட்பது எங்களுக்குள் சண்டையை மூட்டுவது போன்று உள்ளது. இப்படி யாரிடமும் கேட்காதீர்கள். வரும் 6ம் தேதி ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போராட்டங்களுக்கும் இனி மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமை ஏற்று நடத்த போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.