அண்ணாமலையை விசாரிக்கக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
புதுடெல்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளானார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னிடம் வழக்கு தொடர்பாக ஆதாரங்கள் உள்ளது என்று ஊடகங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பேசியியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். அப்படி என்றால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். ஒருவேலை அவர் பொய்யான தகவலை தெரிவித்திருந்தார் என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், இதுபோன்ற வழக்கால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எம்.ரவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த வழக்கை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.