காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலானது தொன்மையும், வரலாற்று பாரம்பரிய சிறப்பும், நுணுக்கமான பல்வேறு வேலைப்பாடுகளையும் கொண்டதாகும்.
கைத்தறி தொழிலில் தமிழ்நாடானது பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற இரகங்களான காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருபுவனம் பட்டு மற்றும் பவானி ஜமக்காளம் போன்ற இரகங்களை உற்பத்தி செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் சீரிய திட்டங்களின் வாயிலாக தொடர் வேலைவாய்ப்பும், உத்திரவாதமான கூலியும் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், நெசவாளர் நலத்திட்டங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக இலாபகரமாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் உள்ள இச்சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அண்ணா பட்டு விற்பனை வளாகம், தமிழ்நாடு அரசின் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ், 6597 சதுர அடி பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த விற்பனை வளாகத்தில் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அசல் பட்டு மற்றும் சரிகை சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள்.
சேலம் வெண்பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள், திண்டுக்கல் Tie & Dye சேலைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள். திருநெல்வேலி செடி புட்டா சேலைகள். விருதுநகர் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், நாகர்கோவில் காட்டன் வேட்டிகள், ஈரோடு பவானி ஜமக்காளம், போர்வை இரகங்கள், படுக்கை விரிப்புகள், வீட்டு உபயோக துணி இரகங்கள் உள்ளிட்ட கைத்தறி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படும். இவ்விற்பனை வளாகம் குளிர்சாதன வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகம் புனரமைக்கப்பட்டதன் மூலம் ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை செயலாளர் வே.அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.