மறைமலைநகர் ஆஞ்சநேயர் கோயிலில் முப்பெரும் தேவியர் ஆலய கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு: மறைமலைநகரில் உள்ள மாருதி சபா ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முருகப்பெருமான் மற்றும் முப்பெரும் தேவியர் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மறைமலைநகரில் எழுந்தருளியுள்ள மாருதி சபா ஆஞ்சநேயர் திருக்கோயிலில் புதிதாக இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக விளங்கும் சரஸ்வதி, காமாட்சி, மஹாலட்சுமி ஆகிய முப்பெரும் தேவியராகிய கன்னிகா பரமேஸ்வரி, வராஹி அம்மன், வைஷ்ணவிதேவி அம்மன்களுக்கும், வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் தனித்தனி கோயில்களில் சமீபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து, மாருதிசபா ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று காலை முருகன் மற்றும் முப்பெரும் தேவியர்களின் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும், அனைத்து பக்தர்களின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாருதிசபா ஆலய தலைவர் வெங்கடாசலம், துணை தலைவர் துரைராஜ், செயலாளர் ஜவஹர், துணை செயலாளர் அய்யாசாமி, பொருளாளர் பக்தவத்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.