ரூ.2,929 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு
மும்பை: எஸ்.பி.ஐ. வங்கி மோசடி தொடர்பாக அனில் அம்பானி மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கின் மோசடி என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் 13ம் தேதி வகைப்படுத்தி, ஜூன் 24ல் ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை தனது பல துணை நிறுவனங்களுக்கு மாற்றி மோசடி செய்யப்பட்டதை ஸ்டேட் வங்கி கண்டறிந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் சிபிஐ அண்மையில் அம்பானியின் வீடு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில் அனில் அம்பானி மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.