ஆசிய துப்பாக்கி சுடுதல் 25மீ பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்ற அனீஸ்
ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த, ஆடவர், 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அனீஸ் பன்வாலா (22) பங்கேற்றார். இப்போட்டியில் சீன வீரர் ஸு லியான்போஃபேன் 36 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். பன்வாலா, 35 புள்ளிகள் பெற்று, வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில், வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கொரியா வீரர் லீ ஜீக்யூனுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த போட்டியில் முதல் 4 சுற்று வரை முன்னிலையில் இருந்த அனீஸ், அதன் பின் சற்று பின் தங்க நேரிட்டதால் நூலிழையில் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தார். ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இதுவரை, இந்தியாவுக்கு 39 தங்கம் உட்பட 72 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் பல பதக்கங்கள், இந்திய ஜூனியர் பிரிவு வீரர்களால் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.