ஆந்திர முதல்வர் குறித்த சர்ச்சை சினிமா இயக்குநரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: அவதூறு வழக்கில் நீண்ட நாளுக்கு பின் அதிரடி
பிரகாசம்: ஆந்திர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் படங்களை உருமாற்றி அவதூறு பரப்பிய வழக்கில், திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை உருமாற்றம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக, திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மத்திபாடு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. மத்திபாடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (45) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில், ராம் கோபால் வர்மாவின் சமூக ஊடகப் பதிவுகள், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் சமூக மதிப்பைக் குலைப்பதாகவும், அவர்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, இயக்குநர் ராம் கோபால் வர்மா நேற்று பிரகாசம் மாவட்டக் காவல்துறையினர் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தாமோதர் கூறுகையில், ‘அவரிடம் கேள்விப் பட்டியல் மற்றும் உருமாற்றம் செய்யப்பட்ட படங்களை அளித்தோம். இந்தப் படங்களை உருமாற்றம் செய்தது யார், யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இவ்வாறு செய்யப்பட்டது என்று கேள்விகள் எழுப்பினோம்.
மேலும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை இழிவுபடுத்தியதற்கான காரணம் என்ன, அவர்களுடன் கடந்த காலத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தனவா என்றும் அவரிடம் விசாரிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் தாமதமாக ராம் கோபால் வர்மா விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த காவல் கண்காணிப்பாளர், வழக்கின் தேவைக்கேற்ப அவர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும், அதற்குக் கால வரம்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டார். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை, இரவு 10 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.