கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு ஏசி பேருந்தை திருடிச்சென்ற ஆந்திர வாலிபர் நெல்லூரில் கைது
* ஜிபிஎஸ் கருவி மூலம் நெல்லூரில் போலீஸ் சுற்றிவளைப்பு
* பஸ்சை விற்று சொகுசாக வாழ நினைத்ததாக வாக்குமூலம்
சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த அரசு ஏசி பேருந்தை கடத்தி சென்ற ஆந்திர வாலிபரை, ஜிபிஎஸ் கருவி மூலம் நெல்லூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். திருடிய பஸ்சை விற்பனை செய்து சொகுசாக வாழ விரும்பியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்தின் டிரைவர், நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் புதிய அரசு ஏசி பேருந்தை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றேன்.
மீண்டும் வந்து பார்த்தபோது பேருந்தை காணவில்லை. மர்ம நபர் ஒருவர் பேருந்தை திருடி சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினர். எனவே, பேருந்தை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இதை கேட்டதும் போலீசாரே ஒருகணம் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதையடுத்து போலீசார், கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஒரு வடமாநில வாலிபர் சர்வ சாதாரணமாக பஸ்சில் ஏறி ஓட்டிச் செல்வது பதிவாகியிருந்தது. புதிய பஸ் என்பதால் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
அதனால் அந்த பஸ் எங்கு செல்கிறது என்று ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அதில், நெல்லூர் செக்போஸ்ட் பகுதியை பேருந்து நெருங்க இருந்தது தெரியவந்தது. உடனே நெல்லூர் செக்போஸ்ட் பகுதியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உஷாரான நெல்லூர் போலீசார், இரும்பு தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேருந்தை கடத்தி வந்தவர், இதை பார்த்ததும் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் கவனித்து விட்டனர். உடனே விரட்டி சென்று, மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு நெல்லூர் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று வடமாநில வாலிபரை கைது செய்து, திருடி சென்ற புதிய பேருந்தை சென்னைக்கு ஓட்டி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைதானவர், பிறவியில் இருந்து வாய் பேச இயலாதவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் ஒரு பேப்பரில் எழுதி காட்டினார். அதில், எனது பெயர் நிரஞ்சன் (28), சொந்த ஊர் ஆந்திர மாநிலம். வேலை எதுவும் கிடைக்காததால் சாப்பாடுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டேன்.
இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று செல்போன்களை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்து சாப்பிடலாம் என நினைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி வந்தேன். அப்போதுதான் ஒரு புதிய பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏறியபோது சாவி இருந்ததால் அப்படியே ஓட்டிக்கொண்டு ஆந்திராவுக்கு சென்று அதை விற்று சொகுசாக வாழலாம் என நினைத்தேன். அதற்குள் போலீசார் கைது செய்து விட்டேன். இவ்வாறு அதில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, அவர் மீது வேறு எதுவும் வழக்கு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.