ஆந்திராவில் தாலி கட்டியதும் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 3 சவுக்கடி கொடுக்கும் வினோதம்
திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புச்சுபல்லே சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தில் வரதட்சணையாக மணமகனுக்கு சாட்டையால் 3 சவுக்கடிகளை கொடுக்கும் பழக்கம் பல காலங்களாக தொடர்கிறது. திருமணத்தில், மணமகனை மூன்று முறை சாட்டையால் அடித்த பின்னரே திருமணம் முழுமையானதாக கருதப்படுகிறது. மணமகன், மணமகளின் கழுத்தில் திருமண மேடையில் தாலி கட்டிய பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அவரை மூன்று முறை சாட்டையால் அடிக்கின்றனர்.
இந்த சடங்கு அவர்களின் சமூகத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, புச்சுபல்லே சமூகத்தினர் கங்கம்மா கோயிலில் இருந்து ஒரு பெட்டியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவர்கள் பெட்டியை திறந்தபோது, அதில் 5 சாட்டைகளை கண்டனர். உடனடியாக, அந்த சமூகத்தினர் கோயிலுக்குச் சென்று கங்கம்மாவிடம் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.
இதனையடுத்து கங்கம்மா நேரில் தோன்றி உங்கள் குடும்பங்களில் திருமணத்தின்போது, மணமகனை மூன்று முறை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று சொன்னாராம். அப்போதில் இருந்து, இந்த சடங்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு திருமணத்திலும் இன்று வரைசதொடர்கிறது.