ஆந்திராவில் தனியார் மருத்துவமனையில் பரபரப்பு; குளியலறையில் குழந்தை பெற்று பக்ெகட்டில் வீசி மாயமான இளம்பெண்: தகாத உறவில் பிறந்ததா? போலீஸ் விசாரணை
திருமலை: தனியார் மருத்துவமனைக்கு வந்த ஒரு கர்ப்பிணி, குளியலறையில் குழந்தையை பெற்று பக்கெட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கித்தலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியுடன் வந்தார். அவருடன் ஒரு வாலிபரும் உதவிக்கு வந்தார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் காத்திருப்பு அறையில் இருந்தனர். பிரசவ வலி அதிகரித்ததால் அந்த இளம்பெண் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரம் கழித்து அந்த இளம்பெண், தான் பெற்றெடுத்த குழந்தையை அங்கிருந்த பக்கெட்டில் வைத்துவிட்டு தன்னுடன் வந்த வாலிபருடன் மருத்துவமனையில் இருந்து மாயமானார்.
இந்நிலையில் குளியல் அறையில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட மருத்துவமனை ஊழியர்கள், சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை பக்கெட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்த சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணி, ஒரு வாலிபருடன் மருத்துவமனைக்கு வரும் காட்சியும், குழந்தை பிறந்த பிறகு இருவரும் அவசர அவசரமாக வெளியே செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகளை வைத்து அந்த இருவரும் யார், குழந்தையை ஏன் விட்டு சென்றார்கள், தகாத உறவில் பிறந்ததால் விட்டு சென்றார்களா என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் தேடி வருகின்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை பராமரிப்பதற்காக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.