ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விஜயநகரம் சிக்னேச்சர் பாலத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதால், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றன. தடம்புரண்ட சரக்கு பெட்டிகள் அற்றக்கப்பட்டு விரையில் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபத்து நடக்கும்போது மற்றொரு தண்டவாளத்தில் ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விஜயநகரம் விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் - பலாசா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கோராபுட் வழித்தடங்களில் இயங்கும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தால், புவனேஸ்வர்-விசாகப்பட்டினம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20841), ஹவுரா-எஸ்எம்விடி பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12863), புவனேஸ்வர்-கேஎஸ்ஆர் பெங்களூர் பிரசாந்தி எக்ஸ்பிரஸ் (18463), ஷாலிமார்-வாஸ்கோ-ட-காமா எக்ஸ்பிரஸ் (18047), ரூர்கேலா-குணுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் (18117), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), ஹவுரா-சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் (12839), புவனேஸ்வர் நியூ-விசாகப்பட்டினம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22819) மற்றும் புவனேஸ்வர் நியூ-செகந்திராபாத் விசாகா எக்ஸ்பிரஸ் (17015) உள்ளிட்ட ஒன்பது ரயில்கள் வழித்தட நிலையங்களில் கட்டுப்பாட்டில் உள்ளன.
தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் இந்தப் பிரிவில் ரயில் இயக்கங்களை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடையூறுகளைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.