வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகள் பழமையான நவாப்கோட்டை கண்டுபிடிப்பு
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வாணியம்பாடி அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டையை கண்டறிந்தனர்.இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற வரலாற்று தடயங்களை வெளிப்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் வழக்கமான கள ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, அலசந்தாபுரம் பஞ்சாயத்து உறுப்பினர் அளித்த தகவலின்பேரில் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் சித்தூர் மாவட்டம் லட்சுமிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடராஜபுரம் என்ற ஊரில் சுமார் 800 அடி உயர மலைமேல், கோட்டை ஒன்று இருப்பதை உறுதி செய்தோம்.தொடர்ந்து அக்கோட்டை அமைந்துள்ள மலை ஆந்திர மாநிலம் லட்சுமிபுரம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட மலை என்பதை அறியமுடிந்தது.
அம்மலையில் கோயில் உள்ளதால் ஆடிமாத வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களோடு பயணித்து அங்கு கள ஆய்வு மேற்கொண்டோம். கருங்கற்களாலும், சுட்ட செங்கற்களாலும், சுதைக் கலவையினாலும் கட்டப்பட்ட அக்கோட்டையில் ஆயுதக்கிடங்குகளும், மறைவிடங்களும், பீரங்கி மேடைகளும், கண்காணிப்புக் கோபுரங்களும், மதில்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. நீர்த்தேவைக்கு மழைநீரை முறையான கால்வாய் வாயிலாக வடிந்துவரச்செய்து ஒரு ஊரணியோடு வந்து சேருமாறு சேமித்து வந்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியை கி.பி.17ம் நூற்றாண்டில் திருப்பத்தூரை உள்ளடக்கிய பகுதிகளை ஆட்சி செய்த விஜயநகர அரசின் வழிவந்த ‘ஜெகதேவிராயர்’ என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்டது இக்கோட்டை கி.பி.1565 ஜனவரி 23ம் தேதி முகலாய ஆட்சியாளர்கள் விஜயநகர ஆட்சியை கைப்பற்றினர். கி.பி.1713 ஆம் ஆண்டில் மராத்தியர்களும் நிஜாம்களும் இப்பகுதிக்காகப் போராடினர். பின்னர் கி.பி. 1714 இல் சித்தூர் பகுதி நவாப் அப்துல் நபி கான் என்ற நிஜாம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அவர் மாதகடப்பா, ராமகுப்பம், வெங்கடராஜபுரம் ஆகிய பகுதிகளில் தனது ஆளுகையை வலுப்படுத்த மூன்று கோட்டைகளைக் கட்டினார். இம்மூன்றில் ஒன்றே வெங்கடராஜபுரத்தில் உள்ள நவாப் கோட்டையாகும்.
ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இக்கோட்டை சிதிலமைந்திருக்க வேண்டும். தமிழக வரலாற்றில் பல கோட்டைகள் குறித்த செய்திகள் பதிவாகி இருப்பது போல இக்கோட்டை குறித்து எங்கும் பதிவாகவில்லை என்பது வியப்பாக உள்ளது. வரலாற்றின் சாட்சியங்களாக சிதைந்த நிலையில் காணப்படும் இக்கோட்டை அன்றைய ஆட்சியாளர்களின் வரலாறு, கட்டிடக்கலை குறித்து அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுப் பெட்டகங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.