ஆந்திரா கிராமத்தில் 30 பேர் அடுத்தடுத்து சாவு: புதிய வகை வைரஸ் காரணமா?
திருமலை: ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள கிராமத்தில் கடந்த 5 மாதங்களில் அடுத்தடுத்து 30 பேர் பலியான நிலையில், புதிய வகை வைரஸ் காரணமா? என்பது உள்ளிட்ட கோணங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துரக்கபாலம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 5 மாதங்களில் சுமார் 30 பேர் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக துரக்கபாலம் கிராமத்தில் முகாமிட்டு வீடுவீடாக பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘கிராமத்தில் முகாம் அமைத்து அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர மேலும் சில பரிசோதனைகளும் செய்து வருகிறோம். கிராமத்தில் உள்ள குடிநீரை ேசாதனைக்கு அனுப்பியுள்ளோம். அவற்றின் முடிவுகள் வந்தபிறகே முழு காரணம் தெரியவரும். கடந்த 5 மாதங்களில் நோய்வாய்ப்பட்டு சிலர் இறந்ததாக பொதுமக்கள் கூறினர். இதற்கு கொசுக்கடி காரணமா? அல்லது புதிய வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் காரணமா? எனவும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இறந்தவர்களில் சிலர் மலிவு விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை குடித்ததாக கூறுகின்றனர். இதுதொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.