ஆந்திரா மாநிலத்தில் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றியது: பயணிகள் உடனடியாக இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
அமராவதி: ஆந்திராவில் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒடிசா மாநில ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7.45 மணிக்கு ஆந்திராவில் உள்ள பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் பச்சிபெண்டா மண்டலத்தில் உள்ள மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில், டிரைவர் உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அனைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினர்.
சில நிமிடங்களில் தீ பேருந்து முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்தது. இதனால் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமும், காயமும் ஏற்படாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் அருகே டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 20 பேர் உயிரிழந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து தீ பிடித்து 20 பேர் இறந்த சம்பவம் மறப்பதற்கு முன்பே அடுத்து அடுத்து பேருந்துகளில் தீ விபத்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.