அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு: எரிசக்தி பாதுகாப்பு முயற்சிக்கு ஒரு மைல்கல்!
டெல்லி: அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல் முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) தெரிவித்துள்ளது. அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 9.20 கடல் மைல் (17 கி.மீ) தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் 2 என்ற இடத்தில் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது 295 மீட்டர் நீர் ஆழத்திலும், 2,650 மீட்டர் இலக்கு ஆழத்திலும் அமைந்துள்ளது. அந்தமான் கடற்கரை தொகுதியான AN-OSHP-2018/1-ல் ஆய்வு கிணறு தோண்டப்பட்டபோது இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்டி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்றும், இந்த கண்டுபிடிப்பு எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடும் என்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எக்ஸ் பதிவில் கூறியதாவது; அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் (National Deep Water Exploration Mission) கீழ், இந்தியாவின் ஹைடிரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு கண்டுபிடிப்பு, இந்தியாவின் எரிசக்தி துறையில் தன்னிறைவுக்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.