மகாளய அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த மக்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
சென்னை: புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்ச காலத்தில் இறந்த முன்னோர்கள் அவரவர் வீட்டில் தங்கிச் செல்வதாக ஐதீகம். அதனால் மற்ற அமாவாசைகளை விட மகாளய அமாவாசை விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளும், தான தர்மங்களும் முன்னோர்களை மோட்சம் அடைய செய்யும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடப்படுகிறது.
இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசையை காட்டிலும் புரட்டாசி மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.இன்று மகாளய அமாவாசை ஆகும். இதையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்து காலையிலேயே பொதுமக்கள் வருகை தந்து, தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
இதேபோல் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கருட மண்டபம், கீதாபுரம் படித்துறை மற்றும் அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஜீயபுரம், முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதைதொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான மக்கள் குவிந்தனர். திருவையாறு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் காவிரி படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மக்கள் அதிகளவில் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்திலும் மக்களின் கூட்டம் அலைமோதியது.
ராமேஸ்வரம்;
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். இதன்படி, புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவு முதல் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவியத் தொடங்கினர். இன்று அதிகாலையில் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கன்னியாகுமரி;
மகளாய அமாவாசையையொட்டி இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமானவர்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். முதலில் பொதுமக்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி அங்கிருந்த புரோகிதர்களை வைத்து திதி கொடுத்து தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் பரசுராமர், விநாயகர் கோயில் மற்றும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.