அன்புமணி கூறியது பொய்யா? பாமக தலைவர் யாரும் கிடையாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் முழு விவரம் மூலம் அம்பலமானது
புதுடெல்லி: உட்கட்சி பிரச்னை இருக்கும் நிலையில், பாமக தலைவராக யாரையும் அங்கீகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாமக தலைவர் நான் தான் என நீதிமன்றம் உறுதி செய்து விட்டது என அன்புமணி கூறியது பொய் என கூறப்படுகிறது. பாமக கட்சியில் ஏற்பட்டுள்ள விரிசலைத் தொடர்ந்து, அன்புமணி கடந்த 4ம் தேதி திண்டிவனத்தில் பேட்டி அளித்தார். அப்போது ‘டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் நான் தான் பாமக தலைவர் என்பதை உறுதி செய்து விட்டன. மாம்பழம் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம்’ என்றார். இந்நிலையில் பாமக கட்சியை தனது மகன் அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதில், பாமகவின் தலைவர் அன்புமணியோ, ராமதாசோ யாருமில்லை என்பதை உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ‘‘பாமக தலைவராக அன்புமணி அல்லது ராமதாஸ் ஆகியோரை அங்கீகரிப்பது தொடர்பான எந்தவொரு சர்ச்சையிலும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யாது என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் அளித்த சமர்ப்பிப்புகளை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. உட்கட்சியில் எந்தவொரு போட்டியாளர் தகராறுகள் ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அத்தகைய தகராறுகளைத் தீர்க்க தகுதிவாய்ந்த சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. இது தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
எனவே கட்சிக்குள் தகராறு இருக்கும் போது அதை நீதிமன்றம் மூலம் தீர்க்க வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்படும் தகவல்கள் மூலம் தேர்தல் ஆணையம் அவற்றை பதிவு செய்கிறது. அதன்படியே, அன்புமணி தலைவர் பதவிக்காலம் வரும் 2026 வரை நீட்டிக்கப்பட்டதாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. இத்தகவல் உண்மையா இல்லையா என்பதை ஆராயும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. எனவே சம்மந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தின் மூலம் இருதரப்பினரும் உரிய நிவாரணம்பெற வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.