சொந்த தந்தையையே கொச்சைப்படுத்தியவர்.. அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: எனது துயரத்தை நாகரீகமற்று கொச்சையாக பேசியிருக்கிறார் அன்புமணி என அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; அன்புமணி, நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். முதலமைச்சர் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.