அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது திமுக தெம்பும் திராணியும் இருந்தால் பாமக தனித்து போட்டியிடுமா?அமைச்சர் எ.வ.வேலு சவால்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில், துர்க்கைநம்மியந்தல் கிராமத்தில், கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இட ஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் பேசுகிறார் அன்புமணி . இட ஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் 21 பேரை அதிமுக ஆட்சியில் சுட்டு வீழ்த்தினர். திமுக ஆட்சிக்கு வந்ததும் ராமதாசை அழைத்து பேசினார் கலைஞர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்துக்கு எம்பிசி என 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி ஆணையிட்டார். அதோடு, 21 குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை வழங்கினார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் 21 பேருக்கு சிலைகளை அமைத்து, மணிமண்டபம் கட்டி திறந்து வைத்தார். மணிமண்டபம் கட்டும் வாய்ப்பை நான் பெற்றேன். திமுகவின் தயவால் நாடாளுமன்றத்துக்கு சென்றவர் அன்புமணி. அவரை ராஜ்யசபா எம்பியாக்கியது திமுக. அவரது வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களில் நானும் ஒருவன். மு.க.ஸ்டாலினை போல அன்புமணியும் எனது மகனை போல தான் பார்க்கிறேன் என்று சொன்னவர் கலைஞர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியை பெற்றுத்தந்தவர் கலைஞர்.
மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு துரும்பை கூட செய்யவில்லை. ஒரே ஒரு பணியை செய்ததாக அவர் சொன்னால், பொதுவாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். பாமகவுக்கு ஓட்டு போட்டால் அன்புமணியும், அவரது குடும்பமும் மட்டும் தான் பதவிக்கு வருவீர்கள். எந்த இளைஞருக்கும் பதவிக்கு வந்ததாக வரலாறு கிடையாது. தர்மபுரியில் வன்னிய சமூகத்தை சேர்ந்த மணியை திமுக சார்பில் நிறுத்திய போது, அவரை தோற்கடிப்பதற்காக தனது மனைவியை களம் இறக்கியவர் தான் அன்புமணி. திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது என ரோஷத்தோடு பேசும் அன்புமணி, தெம்பும் திராணியும் செல்வாக்கும் இருந்தால், திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லாமல் என்றைக்கும் தனித்து போட்டியிடட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.